அரியலூர் மாவட்ட ஆட்சியராக நேற்று முன்தினம் திருமதி மிருணாளினி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து நேற்று அரியலூர் நகரில் உள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் அரியலூர் நகரின் மையப்பகுதியில் இருந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தையும் ஆய்வு செய்து, பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை விவரம், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நேரம், சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளிகளின் எண்ணிக்கை, இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள் விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டதுடன், சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை தொடர்ந்து தாமதமின்றி வழங்கவேண்டும் எனவும், போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதை தொடர்ந்து உறுதி செய்து கொள்ளவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் தாய்-சேய் நல வார்டில் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற தாய் மற்றும் குழந்தையையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அந்த குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு, குழந்தையுடன் சிரித்து விளையாடினர். அங்கிருந்த மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்தை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட்டு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அப்போது மக்கள் செய்தி தொடர்பு துறையால் எடுக்கப்பட்ட போட்டோவை இன்று காலை தனது ஸ்டேட்டஸில் வைத்து அதற்கு மெலோடி சான பாடலையும் வைத்துள்ளார். இது பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும் அரச மருத்துவமனையை நம்பி அதிலும் குறிப்பாக சுகப்பிரசவத்திற்கு மருத்துவர்கள் தயாராக உள்ளனர் பொதுமக்கள் நம்பி வரவேண்டும் என்ற கருத்தை மக்களிடம் தெரிவிப்பதற்காக இது முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியின் இச்செயல் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டப்பட்டுள்ளது.
