திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இன்று காலை நான் திருச்சி வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலக காம்பவுண்ட் சுவர் அருகிலுள்ள மற்றொரு காம்பவுண்ட் சுவர் மற்றும் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்தி ரத்தக்கரை உள்ள கைகளை கொண்ட படத்தை உள்ளிட்டு, பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
இது பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் நற்பெயர் மற்றும் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும்
விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
பிரதமரின் நன்மதிப்பை கெடுக்கும் விதமாக ஒரு பொய்யான உருவகப்படுத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் மனதில் விதைத்து அதன் மூலம், கலவரத்தையும் பொதுமக்களிடையே அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக ஒட்டப்பட்டு இருக்கும் இந்த சுவரொட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் இந்த செயலை செய்ய தூண்டிய வரையும், செய்த நபர்களையும் கண்டுபிடித்து உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
