முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகிறனர் இந்த நிலையில் வீட்டிற்கு உள்ளே செல்ல முன்னாள் அமைச்சர் கே என் நேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை: கே.என். நேருவை உள்ளே அனுமதிக்க மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, தென்னூரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டிற்கு நேரில் வந்தார். அப்போது போலீசார் அவரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கே.என். நேரு செல்போன் மூலம் வீட்டிற்குள் இருந்த கட்சி நிர்வாகியை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் மூலம் இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் பேசிய கே.என். நேரு, “ஏம்பா, பார்த்துட்டுப் போறதுக்குக்கூட ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள்? நாங்கள் எதையாவது வைத்துவிட்டோ அல்லது எடுத்துவிட்டோ போகப்போகிறோமா? சென்னையில் சத்தம் போட்டது போல சத்தம் எதுவும் போடணுமா? அப்போதுதான் உள்ளே விடுவீர்களா? என்னையா போலீஸ், பார்த்துட்டுப் போறதுக்குக்கூட விடமாட்டேங்கிறீங்க. எல்லா மீடியாவும் இங்கேதான் இருக்கிறார்கள். சரிப்பா, நீ முடித்துவிடு. அதன்பிறகு நான் வருகிறேன் எனக் கூறிவிட்டு கே.என். நேரு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விஜய் அரசாங்கம் திமுகவில் சிறப்பாகச் செயல்படும் நபர்களைக் குறிவைத்து, வேண்டுமென்றே பயமுறுத்தும் வகையில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தின் வாயிலாக நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து வெளியே வருவோம்.
என்னை உள்ளே சோதனை முடிந்த பின்னர் வரச் சொன்னார்கள். தொலைபேசியில் அன்பில் மகேஷ் என்னிடம் பேசினார். சோதனை முடிந்த பின்னர் வெளியே வந்து அனைவரையும் சந்திப்பதாக அவர் தெரிவித்தார். திமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் குறிவைத்து விஜய் அரசாங்கம் இதுபோன்ற ரெய்டுகளை நடத்தி வருகிறது. திமுக இந்த ரெய்டை எதிர்கொண்டு, நீதிமன்றத்தின் வாயிலாக சந்தித்து, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். இந்த நடவடிக்கையைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.
