கரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அப்பகுதி

மக்கள் வீடுகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்லவும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை பொதுமக்கள் வெளியேற்றினர்.
மேலும், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் மழைநீர் அதிகளவில் தேங்குவதாகவும், நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்தி, நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
