தஞ்சாவூர் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் உடலை மீட்டு நடுக்காவேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம்-கும்பகோணம் செல்லும் சாலையில் அய்யனார் கோயில் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞர் தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோயில் பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்பவரின் மகன் கட்டிட தொழிலாளி வினோத்குமார் (36) என்பதும், இவருக்கு சொந்த ஊர் அம்மன்பேட்டை. பணியின் காரணமாக பள்ளி அக்ரஹாரம் பகுதியில் தங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
நேற்று இரவு அய்யனார் கோயில் பின்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வினோத்குமார் மற்றும் சிலர் சென்று மது அருந்தி உள்ளனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக வினோத்குமாரை மற்றவர்கள் தலையில் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
