கோவை, பொள்ளாச்சி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து, ஆண்-பெண் ஜோடி ஒன்று விசித்திரமான முறையில் ஹெல்மெட்டைத் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகக் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 10 நாட்களில் மட்டும் கிணத்துக்கடவு மற்றும் கோவை பகுதிகளில் 6 கொலைச் சம்பவங்கள் பதிவாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஜோடியாக வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வாகனத்தின் அருகில் வந்தனர். அப்போது, அந்த வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஹெல்மெட்டை, அந்தப் பெண் துள்ளி குதித்து ஆசையாக அள்ளி எடுத்துக் கொண்டு தங்களது வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்ற காட்சி அங்கு உள்ள சி.சி.டி.வி யில் பதிவாகி உள்ளது.
“தலைக்கவசம் உயிர்க்கவசம்… திருடியாவது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என முற்பட்ட ஜோடி” என்ற தலைப்பில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் நகைச்சுவையாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், ஹெல்மெட் அணிந்து தப்பிச் சென்ற இந்த ஜோடி வேறு ஏதேனும் பெரிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகத் தங்களின் அடையாளங்களை மறைக்க இப்படித் திருட்டில் ஈடுபட்டார்களா ? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
