பள்ளிக்கரணையில் சோகம் – மின்சாரம் தாக்கி மாடு பலி! – 3 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள்
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி மாடு ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 3 மணி நேரம் ஆகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கரணை குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி சகுந்தலா இவர்கள் 2 மாடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.
வழக்கம் போல் இன்று காலை சகுந்தலா 2 மாடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச்

சென்றுள்ளார். பள்ளிக்கரணை கோபால் நகர் பிரதான சாலை அருகே வந்தபோது, அங்குள்ள தெருவிளக்கு கம்பத்தில் இருந்து சாலையோரம் தரையில் கிடந்த மின் கேபிளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அந்த கேபிளை மிதித்த ஒரு மாடு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்தது நல்வாய்ப்பாக மாட்டை ஓட்டிச் சென்ற சகுந்தலாவுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் கண் முன்னே தனது மாடு உயிரிழந்ததை கண்டு அவர் கதறி அழுதுள்ளார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காலை 9.30.மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் சிறிது நேரத்தில் வந்த மின்வாரிய ஊழியர்கள் மட்டும் மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
ஆனால் மதியம் 12.00 மணி வரை சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகளோ, கால்நடைத்துறை அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு வரவே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இறந்த மாடு சாலையிலேயே கிடந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.
பள்ளிக்கரணை பகுதியில் இது முதல் முறை அல்ல. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்
காமகோடி நகரில் 2 மாடுகள் மின்சாரம் தாக்கி பலி
ஐஐடி காலனி பகுதியில் 3 மாடுகள், தற்போது கோபால் நகரில் ஒரு மாடு என
என தொடர்ந்து 6 மாடுகள் இதேபோல் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தெருவிளக்கு கேபிள்கள் முறையாக பராமரிக்கப்படாமல் தரையில் கிடப்பதும், மழை நேரங்களில் மின்கசிவு ஏற்படுவதுமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தரையில் கிடக்கும் அனைத்து மின் கேபிள்களையும் சரி செய்ய வேண்டும். உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பள்ளிக்கரணை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
