பெரம்பூர்: பெரவள்ளூரில் உள்ள இன்ஸ்டா மார்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி உயிரிழந்த நிலையில், பல கோடி ரூபாய் பொருட்கள் நாசமாகியுள்ளதாக தெரிகிறது. சென்னை கொளத்தூர், பெரவள்ளூர் அகரம் எஸ்ஆர்பி கோயில் தெருவில் உள்ள ஆல்ம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் முதல் தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ‘’இன்ஸ்டா மார்ட்’’ குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு பொருட்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் மேலாளராக வைதி உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் காவலாளி ராமமூர்த்தி (54) உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கரும்புகை சூழ்ந்துகொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், செம்பியம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து ராமமூர்த்தியை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்பது தெரிந்தது.
இதனிடையே தீ எங்கிருந்து பரவியது என்று தீயணைப்பு வீரர்கள் பார்த்தபோது கடும் புகை மூட்டம் இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பின்னர் கெமிக்கல் ஸ்பிரே மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி 2 மணி நேரம் போராடி தீ மற்றும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்தினர்.இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் குடோனில் அதிக அளவில் மளிகை பொருட்கள் மற்றும் ஆன்லைன் டெலிவரி பொருட்கள் இருந்துள்ளது. அவைகள் அனைத்தும் எரிந்துநாசமாகி உள்ளது. எவ்வளவு பொருட்கள் சேதமானது என்பது பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
