கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஒரு தனியார் மாணவர்கள் விடுதியின் உணவகத்திற்குள் முதலை ஒன்று திடீரென நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தனியார் மாணவர் விடுதி விடுதியின் தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் ஒருவர் சப்பாத்தி தயார் செய்து கொண்டிருந்த போது சுமார் 4 முதல் 5 அடி நீளமுள்ள முதலை திடீரென அவரின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தது. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று பின்னால் திரும்பி பார்த்த அவர், முதலையை கண்டதும் சப்பாத்தி கட்டையுடன் அலறியடித்தபடி கிச்சனில் இருந்து ஓடினார்.
இதனை தொடர்ந்து கிச்சனில் நுழைந்த முதலையைக் கண்ட விடுதியில் இருந்த சில ஊழியர்களும் கத்தி, கூச்சலிட்டபடி வெளியில் ஓடினர். இதனை தொடர்ந்து விடுதி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த விடுதி மாணவர்களில் சிலர், வனத்துறை வருவதற்கு முன்பாகவே முதலையை வெளியே விரட்ட முயன்றனர். இதனால் பதற்றமடைந்த முதலை உணவகத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியதால் பரபரப்பு அதிகமானது.
சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதலையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.பின்னர் அந்த முதலை அதன் இயற்கை வாழ்விடமான சம்பல் ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. மாணவர் விடுதிக்குள் முதலை புகுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
