சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார், மற்றும் குழந்தைகளுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில், அப்பெண்ணின் மாமியார் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட மாமனார், தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மருமகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவரிடம் ஆபாசமான செய்கைகளை காட்டி வந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில், தான் தூங்கிக் கொண்டிருந்த போது, மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் கடும் ஆத்திரமும் கோபமும் அடைந்து, சமையலறையில் காய்கறி நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொன்றதாகவும் மருமகள் காவல்துறையினரிடத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாமனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். முன்னதாக, வீட்டில் அரங்கேறிய கொடூர சம்பவங்கள் குறித்து தனது நாத்தனாரிடம் அப்பெண் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாத்தனாரும், அவரது சகோதரிகளும் தான் முதலில் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவரின் அவர்கள் அனைவரும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சங்கர்நகர் காவல்துறையினர், மாமனார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலை செய்த மருமகளை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
