அருள்மிகு ஸ்ரீ பாக்கூரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு: காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தக் குடம் ஊர்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள்.
கரூர் மாவட்டம், பள்ளபாளையம் அருகே நத்தமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாக்கூரம்மன் திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வரும் வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தீர்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் திரளுடன் ஆன்மிக உற்சாகமாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் காரணம்பாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையிலிருந்து புனித நீர் எடுக்கப்பட்டது. பள்ளபாளையம், திருக்காம்புலியூர்,

சின்னாண்டான் கோவில், நெரூர், பாலமாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
காவிரி ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், பள்ளபாளையத்திலிருந்து நத்தமேடு பிரிவு வரை மேளதாளங்கள் முழங்க, பக்தர்களின் “அம்மன்” கோஷத்துடன் கொண்டுவரப்பட்டது. பெண்கள் தீர்த்தக் குடம் ஏந்தியும், ஆண்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கியும் பக்தி பரவசத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
