தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இஎம்விஇஇ போட்டோவோல்டாயிக் லிமிடெட் நிறுவன உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கூரையில் புதுப்பிக்கத்தக்க 220 கிலோவாட் சூரிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தொடக்கி வைத்து பேசுகையில், இந்த சூரிய மின் நிலையம் வாயிலாக தோரயமாக ஒரு நாளைக்கு 1000 முதல் 1100 யூனிட் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தின் மொத்த மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 3000 யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 33 சதவிகிதம் மின்சார செலவினம் சேமிக்கப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி 2000 யூனிட் உற்பத்தி செய்யப்படுவதனால் மின்நுகர்வு மூலம் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் குறைகிறது என்றார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) வழங்கிய நிதியுதவியுடன் 2011ம் ஆண்டு ஒரு சுயநுகர்வு மின் உற்பத்தி உயிரி மீத்தனமயமாக்கல் நிலையம் நிறுவப்பட்டது. இந்த நிலையம் கால்நடை சாணம், மனித கழிவு (Night Soil), காய்கறி கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் தினசரி உயிரிவாயு உற்பத்தித் திறன் 500 கன மீட்டர் ஆகும்.
உற்பத்தி செய்யப்படும் உயிரிவாயு மூலம் சுமார் 60 கிலோ (kWe) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்நிலையம் செரிமானம் செய்யப்பட்ட உயிரியல் கழிவுப் பொருளையும் உருவாக்குகிறது. இது உயர்தர மண் வள மேம்பாட்டுப் பொருளாளகவும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.
இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆண்டுதோறும் சுமார் 292 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரி எரிபொருள் வாயுவாக்கி ஆராய்ச்சி மாணவர்களுக்கும், காப்புரிமை பெறுவதற்கும், தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்கும் இவ்வுயிரி எரிபொருள் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா வரவேற்றார். பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார். பெங்களூருவை சேர்ந்த மணி, இஎம்விஇஇ போட்டோவோல்டாயிக் பவர் லிமிடெட் கிரிதர் கோபாலன், உன்னித்குமார், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள். பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
