எஸ்பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்கள் சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் பணிக்கான விளம்பரம் அன்று காலையில்தான் வெளியிடப்பட்டது என்றும், அன்றைய தினமே இரவோடு இரவாக அவசர அவசரமாகப் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட இந்த 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும், கருணை அடிப்படையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்டோர் 2021-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “தேர்வு நடவடிக்கையில் நேரில் பங்கேற்காத நிலையில், பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தங்களது மனுவில், “உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு காரணமாக, விதிகளை மீறியும், இடஒதுக்கீடு முறைகளைப் பின்பற்றாமலும் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
கடந்த ஜூன் மாதம் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ அல்லது முறையான தேர்வு விதிகளைப் பின்பற்றாமலோ உள்ளாட்சித் துறையில் இந்த 54 நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பது விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. முற்றிலும் புறவாசல் வழியாகவே இந்த பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளதால், கோவை மாநகராட்சியின் 54 இளநிலை உதவியாளர்களையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்று அதிரடி உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பணி நியமனம் பெற்றிருந்த இளநிலை உதவியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவை முழுமையாக உறுதி செய்தனர்.
மேலும், “கோவையில் 54 இளநிலை உதவியாளர்களைப் பணி நியமனம் செய்ததில் சட்டவிரோதமான விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன், சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தப்பட்டவர்களை உடனடியாகப் பணியில் இருந்து நீக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
