ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்த 37 வயது தனியார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதியம் சுமார் 2.40 மணியளவில், அந்தப் பெண் ஷம்ஷாபாத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்வதற்காக விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாடகைக் காரில் பயணித்துள்ளார். அப்போது ஓட்டுநர், குறிப்பிட்ட பாதையில் செல்லாமல், விமான நிலையத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பெண் ஓட்டுநரிடம் கேட்டபோது, இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே செல்வதாகக் கூறி காரிலிருந்து வெளியே சென்றுவிட்டு, அடுத்த 2 நிமிடங்களில் மீண்டும் காருக்குள் ஏறியுள்ளார். பின்பக்கக் கதவு வழியாக உள்ளே நுழைந்து, காருக்குள்ளேயே அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுநரிடமிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். காரிலிருந்து வெளியே ஓடி வந்து யாராச்சும் உதவுங்கள் என கத்தியுள்ளார். உடனே அந்த வாடகைக் கார் ஓட்டுநர் வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ்தப்பியோடியதாக போலீசார் கூறுகின்றனர். உடனே பாதிக்கப்பட்ட பெண் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், குற்றவாளி தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த எர்ரபோகு பிரசாந்த் குமார் என்பது தெரியவந்தது. அடுத்த நாள், ஜூலை 21 அன்று அவர்கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைத்தது.
