திருச்சி மாவட்டம் முசிறியில் ட்ரோன் மூலம் போலீசார் அதிரடி கண்காணிப்பு – பொது இடங்களில் மது அருந்திய 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு..
காவிரி கரை, அட்டாலப்பட்டி ஏரியில் ட்ரோன் மூலம் ஆய்வு – பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியவர்கள் சிக்கினர்..
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளியில் மது அருந்துபவர்களைக் கண்டறிய போலீசார் ட்ரோன் மூலம் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் உத்தரவின்படி, முசிறி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார், முசிறி காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் அட்டாலப்பட்டி ஏரி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்திய நபர்களை ட்ரோன் காட்சிகள் மூலம் போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, 5-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மது அருந்துவதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்று பொது இடங்களில் மது அருந்துபவர்களைக் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆய்வாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
