தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. அவரது கவனக்குறைவாலும் மதுபோதையாலும் இந்த விபத்து ஏற்பட்டு, இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய மதன்குமார் மீது ‘கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல்’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதன் மூலம் தங்களது உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். விதிகளையும் மீறி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

