தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து இருக்கின்றன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று இரவிலிருந்து விமானம், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊருக்கு சென்ற நிலையில் இன்று காலையில் இருந்து விமான கட்டணமானது அதிகரித்து இருக்கிறது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழித்தடத்தில், சாதாரண நாட்களில் ரூ.5,354 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், இன்று (ஏப்ரல் 22) திடீரென ரூ.17,527-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை முதல் மதுரை, வழித்தடத்தில் விமானக் கட்டணம் ரூ.13,320-ஆகவும், சென்னை முதல் திருச்சி வரையிலான வழித்தடத்தில் ரூ.14,237 விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது . சென்னை முதல் கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,319 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், இன்று (ஏப்ரல் 22) திடீரென ரூ.12,027-ஆக உயர்ந்துள்ளது. விமான கட்டணம் அதிகரித்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவுகளை செலுத்த விரும்புவதால், விமான நிறுவனங்கள் தேவை அதிகரிப்பைப் பயன்படுத்தி கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன.
