டில்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதுல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து மனீஷ் சிசோடியா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், ‘‘மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு தற்போது வரையில் விசாரணையில் இருந்து வருகிறது.
குறிப்பாக இந்த வழக்கில் ஒரு முக்கிய குற்றப்பத்திரிக்கை, இரண்டு துணை குற்றப்பத்திரிக்கையை சிபி.ஐ தரப்பிலும், அதேப்போன்று ஒரு முக்கிய குற்றப்பத்திரிக்கை மற்றும் ஐந்து துணை குற்றப்பத்திரிக்கைகள் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னும் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் திகார் சிறையில் அமர்ந்து கொண்டு விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு ஆகும். அமலாக்கத்துறை தான் விசாரணையை தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சாகேப் உசேன், ‘‘இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், 250க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளது. அதில் தினமும் 10 மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் டில்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக இணைக்க உள்ளோம். மதுபானக் கொள்கை விவகாரத்தில் அதிக அளவு பண மோசடி செய்ததில் மனீஷ் சிசோடியா நேரடி தொடர்புடையவர். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.