மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே நவீன் (20) என்பவர் ஓட்டி வந்த கே.டி.எம் பைக், கந்தசாமியின் வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த நவீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்தசாமியின் மகன் முருகேசன் புலிவலம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர் பணிமனைக்குச் சொந்தமான அரசு பேருந்து எதிர்பாராத விதமாக தவமணி மீது மோதியது.
இதில் வலது காலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தவமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவமணியின் உறவினர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவர் ராஜேந்திரன் (47) என்பவரை துறையூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வெங்கைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (46). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறை மாரியம்மன் கோவில் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவருக்குத் தலை மற்றும் மூக்குப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மணப்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ந பாலசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை..
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் தும்மாயி அம்மாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் குடும்பப் பிரச்சினைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

