திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா புதுவயல்பட்டியைச் சேர்ந்தவர் அழகர் (67). இவர் தனது மோட்டார் சைக்கிளில் எகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அழகரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அழகர் தூக்கி வீசப்பட்டு, தலை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரை தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (57) என்பவர் ஓட்டி வந்தார். விபத்தில் காரில் பயணம் செய்த ஆறுமுகம் (32) மற்றும் அருணாசலம் (57) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மகன் குணசேகரன் அளித்த புகாரின் பேரில், கார் டிரைவர் மாரிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
