ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள் – சிங்காநல்லூரில் TVK நிர்வாகிகள் சாலை மறியல்!
இதய நோயாளி குழந்தையுடன் காத்திருந்த குடும்பம்: மாற்றுப் பேருந்து வழங்காததால் கோவையில் கொந்தளிப்பு!
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து வெளியேறிய நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து வழங்காததைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் பயணிகளுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சிங்காநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. பேருந்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்து இருந்த நிலையில், சிறிது நேரத்தில் பஸ்சிற்குள் இருந்த மின்சாரக் கம்பிகளில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அடர்ந்த புகை வெளியேறி உள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு உடனடியாகப் பேருந்தை விட்டு வெளியேறினர்.
மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பயணித்த பொதுமக்களுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டிய ஆம்னி பேருந்து நிர்வாகம், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகளைச் சாலையிலேயே காத்து இருக்க வைத்து அலட்சியப் போக்கை வெளிப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
பயணிகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு இதயப் பிரச்சனை இருந்ததாகவும், மேலும் சிலர் உடல்நலக் குறைபாட்டால் அவதியுற்று வந்த நிலையிலும், மாற்று வசதி ஏதும் செய்யப்படாமல் நீண்ட நேரம் காத்து இருக்க வைத்தது பயணிகள் இடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பயணிகளின் நிலைமையைக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) நிர்வாகிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு ஆதரவு தெரிவித்த டிவிேக நிர்வாகிகள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களுடன் இணைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்னி பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
பயணிகளின் பாதுகாப்பைப் பணையம் வைக்கும் வகையில் மின்கசிவுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து மற்றும் மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
