கரூர் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த பாஸ்கர் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.1,440 மின் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், தற்போது ரூ.8,068 கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரது

வீட்டிற்கு நேரில் சென்று மின் மீட்டரை ஆய்வு செய்தனர்.
பல ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வரும் நிலையில், திடீரென மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததற்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் அதிகாரிகள் வழங்கப்படவில்லை என பாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மின் மீட்டரை மாற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார்.
தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் பொதுமக்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற புகார்கள் பல இடங்களில் எழுந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, திடீர் கட்டண உயர்வுக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
