கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மகாலட்சுமி, மற்றும் அவரது கணவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனது தோட்டத்தில் இருந்த பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு தீ வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்தார்.
மகாலட்சுமி தனது கணவர் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து தோட்டத்தில் வாழை, தென்னை, சேனைக்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார்.
அவரது தோட்டத்திற்கு அருகிலுள்ள முத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் நாகராஜ் என்பவர் பணியாற்றி வருவதாகவும், பொதுப் பாதையில் செல்வது தொடர்பாக ஏற்கெனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 18.08.26 அன்று தனது தோட்டத்தில் இருந்த விவசாயப் பொருட்களுக்கு நாகராஜ் தீ வைத்ததாக மகாலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த தீ விபத்தில் சுமார் 4 டன் சேனைக்கிழங்கு, 150 வாழை மரங்கள், 35 தென்னை மரங்கள், 1

டன் மஞ்சள், 1,000 தேங்காய்கள், ஒரு மோட்டார், ஆயில் மற்றும் மின் இன்வெர்ட்டர் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தோட்டத்தில் இருந்தபோதே தன்னை தகாத வார்த்தைகளால் பேசி, தனது கண் முன்னிலையில் பொருட்களுக்கு தீ வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடன் பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில், இந்த சம்பவத்தால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்தை இழந்து மனவேதனையில் தவித்து வருவதாகவும் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவத்திற்குக் காரணமான நாகராஜ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
