கடன் தள்ளுபடி கோரி தாலிக் கயிறு எடுத்து வந்து கோரிக்கை விடுத்த விவசாயிகள்: பெண்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆட்சியர்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று தங்களது

கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அப்போது தங்க சண்முகசுந்தரம் எனும் விவசாயி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார். திடீரென தங்கள் கைகளில் எடுத்து வந்த மஞ்சள் கயிறுகளை, ஆட்சியரிடம் எடுத்துக் காட்டி கோரிக்கை விடுத்தார்.
விவசாய தேவைகளுக்காக எங்கள் வீட்டுப் பெண்களின் தாலி உள்ளிட்ட அனைத்து நகைகளையும் வங்கியில் அடமானம் வைத்து விட்டோம். தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தாய்மாமன் திட்டத்திற்காக நிதி ஒதுக்கி உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் எங்களது பயிர் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்தால் அதற்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர் மிருணாளினி, நீங்கள் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால், கழுத்தில் இருக்க வேண்டிய மஞ்சள் கயிற்றை இங்கு எடுத்து வருவீர்களா? இது தப்பு இல்லையா?
தொடர்ந்து பேசிய ஆட்சியர் மிருணாளினி, இங்கு நிறைய பெரியவர்கள் வந்துள்ளீர்கள். இதுபோன்ற செயலை ஆதரிப்பது போல, அனைவரும் மௌனமாக இருப்பது சரியானதல்ல. இது தவறு இல்லையா? என கூட்டத்தில் பங்கேற்ற சக விவசாயிகள் ஆசிரியர் மிருணாளினி கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆட்சியர் அருகில் அமர்ந்திருந்த சக பெண் அலுவலர்களும், ஆட்சியர் மிருணாளினியின் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம் தலையை அசைத்தனர்.
இது நிறைய பெண்களின் உணர்வோடு தொடர்புடையது. இதனை நீங்கள் வாயால் சொன்னாலே, எங்களுக்கு புரியும். ஏன் இப்படி தாலிக் கயிற்றை எடுத்து வருகிறீர்கள்? உங்களுடைய கோரிக்கையை நீங்கள் என்னிடம் தெரிவிக்காமலேயே, அரசின் கவனத்திற்கு அனுப்பி விட்டேன் என ஆதங்கப்பட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளை பேச அழைத்தார்.
