நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் ஸ்டீபன் ராஜ் (29). தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (24), கடந்த 2020ல் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு யஷ்வந்த்ராஜ் (எ) ஜெகதீஷ் என்ற 7 வயது மகன் உள்ளார். அங்குள்ள தனியார் பள்ளியில் நாளை பள்ளி திறக்கப்படவிருந்த நிலையில் 3ம் வகுப்பு செல்ல இருந்தார்.
நேற்று தந்தை, மகன் வீட்டில் தனியாக இருந்தனர். இரவில் ஸ்டீபன் ராஜ், தனது மகனுக்கு டிபன் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் தானும் தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென எழுந்த அவர், அருகிலிருந்த கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் விரக்தியில் சமையல் அறைக்கு சென்று கயிறுமூலம் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்துக்கு முன்பாக தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியிருந்த நிலையில், இன்று அதிகாலை அதை படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு வந்து பார்த்தனர். யஷ்வந்த்ராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் ஸ்டீபன்ராஜ் தூக்கில்சடலமாக தொங்கியபடி கிடந்த நிலையில் உடனடியாக நெய்வேலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நெய்வேலி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தந்தை, மகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெத்த மகனையே கத்தியால் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்து, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
