Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக கட்டுப்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை பழைய குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் இன்று (04.06.2026) காலை சுமார் 9 மணியளவில் தீப்பற்றியது. மாநகராட்சிப் பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் கழிவு செய்யப்பட்ட நிலையில் ஏலத்திற்கு விடப்பட்டு, இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இப்பகுதியில் தீப்பற்றிய தகவல் கிடைத்தவுடன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின்படி, போர்க்கால அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் வாகனங்களுடன், அலுவலர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த மீட்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார்.
மேலும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பி. சரவணமூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்து மேற்கொள்ளப்பட்ட தீ மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
தீயை கட்டுப்படுத்தும் பணிக்காக 9 தண்ணீர் பௌசர்கள் (Water Bowsers), 3 ரீசைக்ளர்கள் (Recyclers), 3 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 30 தண்ணீர் டேங்கர் லோடுகள் பயன்படுத்தப்பட்டன.
அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்களின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் இன்று காலை 11 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!