தஞ்சாவூரில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் – உத்– தஹ்ரிர் மற்றும் கிலாபத் இயக்கத்திற்காக, இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்தியதும், மூளை சலவை செய்து, தயார்படுத்த ரகசிய வகுப்புகளை சிலர் நடத்தி வருவதாக தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில், தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, டி.எஸ்.பி., சார்லஸ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், செந்தில்குமார், விஷ்ணுபிரசாத், ஜெயந்தி, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த செப்.29ம் தேதி, தஞ்சாவூர், டவுன்கரம்பை பகுதியை சேர்ந்த ஜாபர் சாதீக் மகன்கள் யாசர் அப்துல், உமர்முக்தர், கீழவாசல் எஸ்.என்.எம்.,நகரை சேர்ந்த கமல் பாஷ்டா மகன்கள் ஜாகீர் உசேன்,52, சகோதர் அப்துல் வக்கீல், கீழவாசல் ராமசாமிபேட்டையை சேர்ந்த நடராஜன் மகன் சம்சுதீன்,27, கீழவாசல் ரகுமான் நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் சேக்பரீத் ஆகியோர் வீடுகளில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
அதன்பேரி்ல், தடை செய்யப்பட்ட அமைப்பான ’ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்’ மற்றும் ‘கிலாபத்’ தொடர்புடைய, சுமார் 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஐந்து மொபைல்கள், லேப்டாப், பென்டிரைவ்களை கைப்பற்றினர். இது தொடர்பாக, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாசர் அப்துல், உமர்முக்தர், ஜாகீர்உசேன், அப்துல்வக்கீல் சேக்பரீத் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சம்சுதீனை போலீசார் தேடி வருகின்றனர். இதனால், கீழவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
