Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எரிபொருள் விலை உயர்வு – ஏர் இந்தியா விமானக் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு!

ஏர் இந்தியா விமானக் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு!

சர்வதேச அளவில் விமான எரிபொருள் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், ஏர்இந்தியா மற்றும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள், இன்று முதல் தனது உள்நாடு மற்றும் பன்னாட்டு விமானங்களின் பயண கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மேற்காசிய நாடுகளுக்கு இடையே போர் பதற்ற நிலை காரணமாக, தற்போது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை தொடர்ந்து பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியா உள்பட அனைத்து நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், தங்களின் உள்நாடு மற்றும் பன்னாட்டு சேவைகளின் விமான பயண கட்டணங்களை அதிகளவில் உயர்த்தி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டண உயர்வை அறிவித்தது.

இந்நிலையில், ஏர்இந்தியா மற்றும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள், தங்களின் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளின் டிக்கெட் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி அறிவித்துள்ளன. கட்டண உயர்வு இன்று (9ம் தேதி) காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு விமான சேவை பயண கட்டணங்களில் 500 கிமீ வரை ரூ.400, 501-1000 கிமீ வரை ரூ.600, 1001 முதல் 1500 கிமீ வரை ரூ.850, 1,501-2,000 கிமீட்டருக்கு மேல் ரூ.1,200 என ரூ.400 முதல் ரூ.1,200 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பன்னாட்டு விமான சேவையில் வடஅமெரிக்க நாடுகளுக்கு செல்ல 215 அமெரிக்க டாலர் (ரூ.20,855), ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல 210 அமெரிக்க டாலர் (ரூ.20,370), லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல 135 அமெரிக்க டாலர் (ரூ.13 ஆயிரம்), மேற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல 55 அமெரிக்க டாலர் (ரூ.5,300) என பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், எதிர்காலத்தில் விமான எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் சூழலுக்கேற்ப ஆய்வு செய்து, டிக்கெட் கட்டணங்களில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வு அறிவிப்பால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28ம் தேதி மேற்காசிய நாடுகளின் போர் பதற்றம் துவங்கிய பிறகு, ஏர்இந்தியா மற்றும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் 3வது முறையாக கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!