மும்பையின் குர்லா பகுதியில் உள்ள குரேஷி நகரில் இன்று அதிகாலை சுமார் 2:40 மணியளவில், மும்பை பெருநகரப் பிரதேச வளர்ச்சி ஆணையத்தின் கட்டுமானப் பணிகளின்போது கிரேனைப் பயன்படுத்தி ஜேசிபி இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ராட்சத கிரேன் நிலை தடுமாறி வீட்டின் மீது சரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 முதல் 10 பேர் காயமடைந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், அருகில் உள்ள கட்டுமானப் பணியிடத்தில் இயக்கப்பட்ட இந்த கிரேன், குர்லா மற்றும் ட்ராம்பே இடையே உள்ள ஓவர்ஹெட் மின்சாரக் கோட்டின் மீது விழுந்தது.
எனினும் அந்த ரயில் பாதை முக்கியமாக சரக்கு ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் பயணிகள் ரயில் சேவைகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
