செய்யாறு அருகே சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டாராம்.
அங்கு சென்றபின் சிறுமிக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பெற்றோர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் கேட்டனர். அப்போது பாட்டியின் ஊரில் தன்னை 8 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள தோப்பிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் பாட்டியிடம் கூறாமல் தனது ஊருக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் தலைமையிலான போலீசார் மற்றும் பிரம்மதேசம் போலீசார், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஊரில் வந்து, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பல் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் முழுவிவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
