Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.2.40 கோடி தங்கம் பறிமுதல் – கடத்தல் முயற்சி அம்பலம்

ரூ.2.40 கோடி தங்கம் பறிமுதல் – கடத்தல் முயற்சி அம்பலம்

சென்னை, மீனம்பாக்கத்தில் துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்க பசையை ஷூக்களில் மறைத்து வெளியே கொண்டு செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்கள் இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விமானத்தில் கடத்தி வந்த பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். துபாயிலிருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்கி குடியுரிமைச் சோதனை பகுதிக்கு சென்று விட்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றும் இரண்டு பேர், அங்கு சந்தேகத்திற்கு இடமாக, விமான பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி குடியுரிமை சோதனை பிரிவுக்கு செல்லும் இடத்தில் உள்ள விமான நிலைய கழிவறை அருகே நின்று கொண்டிருந்தனர்.

இதை கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு, அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் இருவருக்கும் இங்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை. தரை தளத்தில் தான் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணியிடம் ஒதுக்கப்படாத இடத்திற்கு எதற்கு வந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தியதோடு, அவர்கள் இருவரையும் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது இருவரும் அணிந்திருந்த ஷூவின் உள்ளே கருப்பு நிற டேப் சுத்தப்பட்ட ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. சுங்க அதிகாரிகள் அதை எடுத்து பார்த்த போது, அதனுள் சுத்தமான 24 கேரட் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு தூய்மைப்பணியாளர்களிடம் இருந்து 1.64 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2.40 கோடி. இதையடுத்து இருவரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது துபாயிலிருந்து வந்த விமான பயணி விமான நிலைய கழிவறை பகுதிக்கு இவர்களை அழைத்து சென்று, இவர்களிடம் தங்க பசையை கொடுத்து வெளியில் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறிவிட்டு அவர் சுங்கச் சோதனை முடித்துவிட்டு வெளியில் சென்றது தெரியவந்தது.இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த அந்த கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த கடத்தல் பயணி இவர்களிடம் தங்கத்தை கொடுத்துவிட்டு இவர்கள் சுங்கத்துறையிடம் மாட்டிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார் என்று தெரிகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!