ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது…. இதனையொட்டி, திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இணைந்து ஒரு விசேஷமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியுள்ளனர்….
பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், பழம்தமிழ் எழுத்துகளை எழுதித் தங்களின் பெயர்களைப் பொறித்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்….
தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் தொன்மையையும், நமது எழுத்து வடிவங்களின் வரலாற்று வளர்ச்சியையும் எளிதாகப் புரிய வைக்கவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய தமிழ் எழுத்து வடிவம் ‘தமிழி’ (தமிழ் பிராமி) என்று அழைக்கப்படுகிறது. இந்த எழுத்து வடிவத்தைக் கற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள், பானை ஓடுகளில் தங்களின் பெயர்களைத் தம் கைப்படவே எழுதி மகிழ்ந்தனர்.
பழங்காலத்தில் எகிப்து நாட்டின் ‘பெரெனிகே’ துறைமுகத்தில் கிடைத்த பானை ஓடுகள் முதல், சமீபத்தில் தமிழகத்தின் கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வரை அனைத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன….
இதன்மூலம், பழந்தமிழர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய பொருட்களிலேயே தங்களின் எழுத்தறிவைப் பதிவு செய்துள்ளனர்…
போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை

கலைச்செல்வி முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்….
பழங்காலத் தமிழகத்தில் அரசர்கள், புலவர்கள் மட்டுமன்றி, பானை செய்யும் கைவினைஞர்கள், வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் வரை அனைவருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர் என்பதற்குப் பானை ஓட்டுக் கீறல்களே சான்றாகும்…
2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக சமூகம்: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள எழுத்துப் பொறிப்புகள், கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே) தமிழர்கள் மிகச் சிறந்த எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்குப்

பறைசாற்றுகின்றன….
நமது முன்னோர்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்தும் வகையில் போசம்பட்டி பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது….
