Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புள்ளநேரியில் கிராம சபை கூட்டம்-கலெக்டர் நல்லசிவன் பங்கேற்பு

புள்ளநேரியில் கிராம சபை கூட்டம்-கலெக்டர் நல்லசிவன் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புள்ளநேரியில் கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் பங்கேற்பு டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளநேரி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் கலந்து கொண்டு, காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீரை தேவையின்றி தேக்கி வைக்காமல் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்பு கூட்டத்தில் புள்ளநேரி பகுதி பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.

மேலும், புள்ளநேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள், சில நேரங்களில் மேல்சிகிச்சைக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பின்பு இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டிற்கு வர உள்ளதால், மேல்சிகிச்சைக்காக பொதுமக்கள் அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை குறையும் என்றும், திருப்பத்தூர் பகுதியிலேயே பொதுமக்கள் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் பதிலால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

error: Content is protected !!