Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-அடுத்தடுத்து நிலச்சரிவு

கேரளா: கடந்த சில நாட்களாகப் கேரளாவின் பல இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மத்திய கேரளா முழுவதுமாக வெள்ளத்தில் மிதப்பதுடன், தொடர் நிலச்சரிவுகளும் பொதுமக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு விவரம்

இடுக்கி மாவட்டம் : தோடுபுழா அருகிலுள்ள குடயத்தூர், ஆடுமக்காடு பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சுமதி (Sumathi) என்ற பெண்மணிக்கு சொந்தமான வீடு முழுமையாக மண்ணில் புதைந்தது. இடிபாடுகளில் சிக்கிய சுமதியின் உடல் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரது கணவர் ரவி மற்றும் மகன் ரதீஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடுக்கியின் வாகமண் பகுதியில் உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வைக்கம் பகுியைச் சேர்ந்த பிரபாகரன் நாயர் (Prabhakaran Nair) என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

கோட்டயம் மாவட்டம்: பூஞ்சார் பகுதியில் உள்ள பையனித்தோட்டம் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் ஜோசப் (Joseph) என்பவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அதே வீட்டில் சிக்கியிருக்கும் அவரது தாயாரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாகப் புல்லகாறு நதியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் தாழ்வான பாலம் (Chappath) நீரில் மூழ்கியுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 6 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டப்பனை – வாஜவரா சாலை மற்றும் நெல்லிமலைப் பகுதி சாலைகளில் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்டிப்பெரியார் சோட்டுப்பாறை நீரோடையில் நீர்மட்டம் உயர்ந்ததால் தேசிய நெடுஞ்சாலை 183-ல் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தின் எருமேலி, காஞ்சிரப்பள்ளி, எராத்துப்பேட்டை மற்றும் கூட்டிக்கல் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளைச் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் மீட்புக் குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட் (Red Alert): பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் (Orange Alert): எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாகவும், தொடர் மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளன.

error: Content is protected !!