கோவை: உலகளவில் எபோலோ வைரஸ் பரவி வருவதால் கோவையில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலையத்தை பொறுத்தவரை தேசிய அளவிலும் மற்றும் சர்வ தேச அளவிலும் நாளொன்றுக்கு 32 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இதில் சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட இரண்டு பன்னாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10,000 பயணிகள் கோவை பன்னாட்டு விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் சுமார் 1000 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த எபோலோ வைரஸ் நோய் பரவல் உலகளவில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், தடுப்பு சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் கோவை விமான நிலையத்தில் 2 நாட்களாக செய்யபட்டு வருகிறது.
கொரோன காலத்திலேயே இரண்டு தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் நிறுவப்பட்டிருக்கிறது. முழுவதுமாக காய்ச்சல் இருக்கும் பயணிகளுக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை அந்த இயந்திரங்கள் மூலமாக பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண விவரங்கள் கேட்கப்பட்டு வருகிறது.
எபோலா நோய் பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டதை தொடர்ந்து நோய் பரவலை தடுக்க மாநில சுகாதார துறைகள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படியில் கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் மற்றும் கூடுதல் சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டார அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
