தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, சோலைத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளரான முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும் ஓபிஎஸ்க்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஓபிஎஸ் பேசுகையில், “பெண்களுக்கு ரூபாய் 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்க உள்ளனர் அதனை வைத்து தரமான பொருட்களை நீங்கள் வாங்கலாம். குடும்பங்களுக்கு என்ன வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு எந்த திட்டங்கள் வழங்க வேண்டும் என்பதை நமது முதலமைச்சரின் இந்த நான்கு ஆண்டு ஆட்சியை பார்த்தாலே தெரியும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தான் முதன்மையானவர்.
அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர்கள். சிலர் எதேர்ச்சியாக வந்தவர்கள் நான் உட்பட எனக்கு முதலமைச்சராக பதவி வழங்கிய பின்னர் பதவியை மீண்டும் வழங்கினேன், எடப்பாடி பழனிசாமி வழங்கினாரா? . நம்பிக்கை துரோகி எப்படி மக்களுக்கு நன்றியுடன் இருப்பார். மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே நான் போடியில் போட்டியிடுகின்றேன். நீங்கள் என்னிடம் வழங்கிய பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்,இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்” என தெரிவித்தார்.
