வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஒரே வட்டத்தில் 6 ஆண்டுகள் மற்றும் ஒரே சரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வனச்சரகர்கள்; ஒரே பிரிவில் 3 ஆண்டுகள் மற்றும் ஒரே கோட்டத்தில் 6 ஆண்டுகள் பணிபுரிந்த வனக்காப்பாளர்கள்,
ஒரே ‘பீட்’ பகுதியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வனக்காவலர்கள், ஓட்டுநர் உரிமம் கொண்ட வனக்காவலர்கள், வனக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரே நிலையத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வன அலுவலர்கள் ஆகியோர் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்த விபரங்கள் தமிழ்நாடு டிஜிட்டல் பாரஸ்ட் என்ற இணையதளம் வாயிலாக சேகரிக்கப்பட்டு, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த மாறுதல் உத்தரவை அமல்படுத்தி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது இது ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் தரப்பில் கூறும் போது,
பொதுவாக அனைத்து அரசுத் துறைகளிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் பொது மாறுதல்கள் நடைபெறும். ஆனால், தற்போது அடுத்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் இந்த உத்தரவு வந்துள்ளது
அதிர்ச்சி அளிக்கிறது.
இதனால் ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக பெண் அதிகாரிகளும், பெண் ஊழியர்களும் மனரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் கடுமையான சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில், இந்தத் திடீர் பணியிட மாறுதல் உத்தரவு நியாயமற்றது என்பதால், வனத்துறை தலைமை உடனடியாக தலையிட்டு இந்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
