தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு புதிய அதிரடி திருப்பமாக, விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் வந்து தவெக-வில் இணைந்துள்ள விஜயதரணியின் இந்த திடீர் முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பிந்தைய கால கட்டத்திலும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன என்பதற்கு விஜயதரணியின் இந்த கட்சித் தாவலே சான்றாகும். காங்கிரஸ், பாஜக எனப் தேசியக் கட்சிகளில் பயணித்த ஒரு மூத்த தலைவர், தற்போது பிராந்தியக் கட்சியான தவெக-வை நோக்கி வந்திருப்பது அக்கட்சியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. தவெக-வில் இணைந்துள்ள விஜயதரணிக்கு தென் மாவட்டப் பகுதிகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இவரின் இந்த வரவு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எத்தகைய பலனைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
📍 சென்னை, ஜூன் 13, 2026 — ETamilNews நிருபர்
