கேரளா இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் இருந்து வந்து தென்னிந்தியாவில், குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்ததாக கூறியிருந்தார். பிரகாஷ் ராஜின் இந்த பேச்சானது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இதிகாசத்தை திரித்துகூறும் வகையில் அமைந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பானு பிரகாஷ் ரெட்டி என்பவர் சார்பில் பிரகாஷ் ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பானு பிரகாஷின் வழக்கறிஞர் கோத்தப்பள்ளி அஜய் குமார் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், “ராமரும் லட்சுமணரும் வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்தியாவில் போர் தொடுத்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு ராமாயணத்தை திரித்து கூறும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது.
இதுபோன்ற கருத்துகள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவதாக இருப்பதுடன், ‘ஆரிய – திராவிட’ பிரச்சனைக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், கலாச்சார ரீதியாக கருத்துகளை பதிவு செய்யும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளான 299,196 மற்றும் 356 ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ள நிலையில், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அவர் 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பிரகாஷ் ராஜ் எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும்” எனவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, “7 நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்பதோடு, உரிமையியல் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் இந்த நோட்டீஸுக்கு பிரகாஷ் ராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
