தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி ஆட்சி அமைக்க தவெக சார்பாக அழைப்பு வரவில்லை என்று கூறியுள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள், மாநிலக் குழுவை கூட்டியே ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தவெக ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளதால், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தவெகவின் எண்ணிக்கை 107ஆக குறையும். அப்படி பார்க்கும் போது, 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட 4 கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் தவெக தரப்பில் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு எடுப்போம். இதுவரை கூட்டணி ஆட்சி தொடர்பாக தவெகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. தவெகவிடம் இருந்து அழைப்பு வரும் பட்சத்தில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் மாநிலக் குழு மற்றும் செயற்குழுவை கூட்டி ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெக பக்கம் செல்லும் என்று கருதப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ளதால், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
