2026 சட்டமன்ற தேர்தல் மூலம் தவெக தலைவர் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்கிறார். பல்வேறு கூட்டங்கள் நடத்தியும் அவரது கட்சியில் குறிப்பிடும்படியாக யாரும் சேரவில்லை என்ற ஒரு குறை இருந்தது. அதை போக்கும் வகையில் பல்வேறு கட்சிகளில் இருந்து சில நிர்வாகிகளை விஜய் வளைத்து போட்டு வருகிறார். சர்க்கார் திரைப்பட பாணியில் தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாஜி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கட்சிக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரபல பேச்சாளரான ராஜ்மோகன், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பாஜக – அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தவெகவிற்கு வந்துவிட்டனர்.
அடுத்ததாக மாஜி ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ், இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைகிறார் . அடிப்படையில் மருத்துவரான அருண்ராஜ், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார். இந்திய வருமான வரித்துறையில் பணியில் உள்ள அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண்ராஜ், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடயே தான் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய இருப்பதாகவும், இணை பொது செயலாளர், துணை பொது செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே அவர் தவெக தலைவர் விஜய்க்கு, ரகசிய ஆலோசகராக செயல்பட்டு வருவதாகவும் ஒரு பேச்சு இருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.
இவர்தவிர மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான ராஜலட்சுமி, அதிமுக வால்பாறை முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன், ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் மரிய வில்சன், திருவைகுண்டம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் த.வெ.க.வில் இணைகிறார்.
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
.