Skip to content

பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து கடும் சரிவு: கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்து, விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியது முதலே தென் மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செடிகளில் அரும்புகள் உருவாவது தடையாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக 5 முதல் 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் வரும். ஆனால், கடும் பனியால் நேற்று வெறும் 300 கிலோ மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.

வரத்து குறைந்ததாலும், தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாகவும் மல்லிகையின் தேவை அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்று காலை ஒரு கிலோ மல்லிகை ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி, மளமளவென உயர்ந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலும் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்தது. காலை ரூ.7 ஆயிரத்திற்கு விற்ற மல்லிகை, மதிய நேரத்திற்குள் கிலோ ரூ.10 ஆயிரத்தை எட்டியது. பூக்களின் இந்த அதிரடி விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!