நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன் மீது சந்தேகம் என சென்னை நீலாங்காரை காவல்நிலையத்தில் ரவி மோகனின் மேலாளர் கோகுல் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவிமோகன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வெளியில் சென்று வீடு திரும்பிய நடிகர் ரவிமோகன் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் காணவில்லை என வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு பணிப்பெண் தனக்கு தெரியாது என்று கூறிய நிலையில் அவரது மகனையும் கேட்டுள்ளார். அவரும் அந்த பணம் பற்றி தெரியாது என கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவிமோகன் வீட்டில் பணி செய்யும் பெண் நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பணிப்பெண்ணின் கணவர் ரவி மோகன் வீட்டிற்கு வந்து மனைவி உள்ளாரா என்று கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் நடந்ததை கூறி வீட்டிற்கு வர சிறிது நேரம் ஆகும் என்று ரவி மோகன் தரப்பில் கூறியதாகவும் இதனால், ஆத்திரமடைந்த பணிப்பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பட்டு அறையான 100க்கு தொடர்பு கொண்டு தன்னுடைய மனைவி நடிகர் ரவிமோகன் வீட்டில் இருந்து பணி முடிந்தும் இன்னும் வீடு திரும்பாமல் உள்ளார், தனக்கு பயமாக உள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடிகர் ரவிமோகனிடம் பேசியுள்ளனர். பின்னர் பெண்களை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க சட்டம் இல்லை. இப்படி பணி முடிந்த பிறகும் வீட்டிற்கு அனுப்பாமல் காணாமல்போன பணம் குறித்து இரவு நேரத்தில் வீட்டில் வைத்து விசாரிக்க கூடாது என்று போலீசார் கூறியதும் பணிப்பெண்ணை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருட்டு என ரவி மோகன் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன் மீது சந்தேகம் என சென்னை நீலாங்காரை காவல்நிலையத்தில் ரவி மோகனின் மேலாளர் கோகுல் புகார் அளித்துள்ளார். ரவி மோகன் நேற்று தனது வீட்டில் 2 பணிப்பெண்கள் அவரது மகனை சிறைபிடித்து வைத்திருந்தார்.
வீட்டில் நகை, பணத்தை திருடியதால் சிறைபிடித்ததாக ரவிமோகன் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். இருவரையும் போலீசார் மீட்ட நிலையில், அவர்கள் மீது இன்று போலீஸ் ஸ்டேசனில் ரவிமோகன் புகார் அளித்துள்ளார்.
