தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (67). இவர் எட்டயபுரம் அருகேயுள்ள பதினெட்டாம் படி கருப்பசாமி கோயில் பூசாரியாக உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்; மற்றொருவர் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.
நேற்று காலை 7 மணியளவில் கருப்பசாமி தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் மகன்களும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் இவது வீட்டிற்குக் கூரியர் ஊழியர் தபால் கொண்டு வந்தார். அப்போது வீட்டுப் கதவு உடைக்கப்பட்டுத் திறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், செல்போன் மூலம் கருப்பசாமிக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரும், மனைவியும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் பதறியடித்து வந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அந்த அறை முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கமும், 2 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கருப்பசாமி வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்று விட்ட நிலையில் கார் ஒன்று வந்துள்ளது. அந்த கார் நீண்டநேரமாக அவரது வீட்டின் முன்பு நின்றிருந்துள்ளது. அதில் வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளைப் பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
