கரூரில் காங்கிரஸ் கட்சியினர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் சந்தித்து பொன்னாடை அணிவித்து இரு கட்சி இணைப்பை பரிமாறிக் கொண்டனர்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட 108 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதல்வராக நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆட்சியை அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தனிப்பெரும்பான்மையை எட்டாத காரணத்தால் தவெக பல்வேறு கட்சிகளுடன் ஆதரவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு உறுதியளித்தனர்.
மேலும், விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கத் தேவையான கடிதத்தை வழங்கியுள்ளார். எனினும், 118 என்ற எண் எட்டப்படாததால் உடனடி பதவியேற்பு குறித்து சிக்கல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கட்சிகளின் இணைப்பை பரிமாறிக் கொண்டு வாழ்த்தினர். அதற்கு பதிலளிக்கும் வகையில், தவெக மாவட்ட செயலாளரும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசியலில் நாளை என்ன மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் சூழல் தீவிரமாகி வருகிறது.

