கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில், பொதுமக்களிடையே சட்டம்-ஒழுங்கு, போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் சிறப்பு நடைபயணம் (Foot Patrol) மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் உழவர் சந்தை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, போதைப்பொருட்களின் தீமைகள், சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையை ஒட்டிய பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் குறைகளை கவனமாகக் கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், அந்தப் பகுதியில் காவல் கண்காணிப்பை அதிகரித்து, பொதுமக்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து “புட் பெட்ரோல்” (Foot Patrol) எனப்படும் நடை ரோந்து மூலம் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று வணிகர்களை சந்தித்தார். கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது, இரவு நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எடுத்துரைத்த அவர், கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அதில் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு தலைக்கவசம் அணியாததே முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவசர காலங்களில் பொதுமக்கள் காவல்துறையை எளிதில் தொடர்புகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலி (Kaval Udhavi App) குறித்து பொதுமக்களிடம் விளக்கமளித்து, அதன் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார். பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில், சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை இருசக்கர வாகன ஓட்டுநர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
