கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கரூரில் தற்காலிக சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நேற்று சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், இன்று காலை விஜய்யின் பிரச்சார வாகனம் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தடயவியல் துறை அதிகாரிகள் வாகனத்தின் நீளம், அகலம் மற்றும் விஜய் நின்று பேசிய இடங்களை இன்ச் பை இன்ச் முறையில் துல்லியமாக அளவீடு செய்தனர்.
வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் பரணிதரன், கட்சி அலுவலக உதவியாளர் குரு மற்றும் வழக்கறிஞர்கள் என 5 பேர் ஆஜராகினர். பிரச்சாரத்தின் போது வாகனம் எப்படி இயக்கப்பட்டது, கூட்ட நெரிசலின் போது வாகனத்தின் வேகம் என்ன என்பது குறித்து ஓட்டுநரை அந்த இடத்திலேயே அமர வைத்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பினர்.
சுமார் 8 மணி நேர நுணுக்கமான ஆய்வுக்குப் பிறகு, அந்த வாகனம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவைப்படும்போது மீண்டும் ஆஜராக வேண்டும் என ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 12-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இந்த வாகன ஆய்வு விசாரணை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

