கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர், வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து

நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறார்.
இன்று காலை சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது மலைக்கோவிலைச் சுற்றி வலம் வந்து, பின்னர்

நிலையை வந்தடையும். இந்த தைப்பூச தேர்த்திருவிழாவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

