கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை வெளிநாட்டில் இருந்ததால், அந்த சிறுவர்களைத் தானே நன்கு பராமரிப்பதாகக் கூறி, கேரளா திரும்பியதும் அவர்களைத் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
தன் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் சம்பத் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகப் பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும், அவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாதிரியாரின் அத்துமீறல் எல்லை மீறியதால், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இது குறித்துத் தங்கள் தாயிடம் அழுது புலம்பியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், வடகரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டதையடுத்து, போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த பாதிரியார் சம்பத் உடனடியாகத் தலைமறைவானார்.
தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், சம்பத் பெங்களூருவில் பதுங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. அங்கிருந்து அவர் டெல்லிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கேரளாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே பணியாற்றிய டெல்லி, மைசூரு போன்ற இடங்களிலும் இதுபோல வேறு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

