Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் மன்னர்கள் காலகல்வெட்டு கண்டெடுப்பு

மன்னர்கள் மட்டுமல்ல மக்களும் அறச்செயல் செய்வதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் காலந்தோறும் வரலாற்றில் பறைசாற்றிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தஞ்சை ராஜகோபால சாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் பிற்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பெற்றது. கல்வெட்டை நேரில் சென்று ஆய்வு செய்த சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மணி. மாறன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி, ஏடகம் சுவடியியல் மாணவர் சரவணன் ஆகியோர் கூறுகையில்
பொதுவாக தமிழகத்தில் அறச்சாலைகளாக சத்திரங்களும் மடங்களும் ஊர்கள் தோறும் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய நாட்களில் வழிப்போக்கர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் வேளையில் அச்சத்திரங்களில் தங்கியிருந்து உணவருந்திச் செல்வது வழக்கமாக இருந்தது. அவ்வாறு செல்பவர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியும் அங்கேயே இருந்தது. இவை தருமக்கட்டளை என்ற பெயரில் பல இடங்களில் நடைபெற்று வந்தது. யாரோ ஒருவராலோ அல்லது ஒரு சிலரோ சேர்ந்து இத்தகு தரும காரியத்துக்கு நிலமும் பொருளும் நிரந்தரமாகக் கிடைக்குமாறு வழங்கியிருந்தனர்.
இத்தகு சத்திரங்களின் நிருவாகம் பற்றி கி.பி. 1855ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று சத்திரத்திற்கு வருகின்ற வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கண்டிப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். இது எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்றும், வழிப்போக்கர், வயோதிகர், பெண்டிர், குழந்தைகள் முதலியவர்களுக்கே உணவு வழங்க வேண்டும் என்றும், உழைக்காமல் வரக்கூடிய சோம்பேறிகளுக்கு இங்கே தங்கவும், உணவளிக்கவும் கூடாது என்றும் கூறுகிறது. இதேபோன்றதொரு அறக்கட்டளைதான் கிட்டப்பா வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியாகும். சுமார் ஒன்னேகால் அடி அகலமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் 30 வரிகள் காணப்படுகின்றது.
கி.பி. 1889ஆம் வருடம் ஜனவரி மாதம் 17 தமிழ் சர்வதாரி ஆண்டு தை மாதம் 6 குறிப்பிடப்பெற்றுள்ள இக்கல்வெட்டில் கி.பி. 1887ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தஞ்சாவூர் கோட்டைக்குள் ராஜகோபால சாமி கோயில் வீதி அண்ணு பாட்டகர் சொல்படி நாகோ பாட்டகர் செய்த தருமச் செயலை அவருடைய தமையன் வெங்கோ பாட்டகர் எழுதி வைத்த உயில் என்று குறிப்பிடுகிறது. துவாதசி கட்டளை தருமத்திற்காக அவருடைய வீட்டின் மேல்புறமும் அதற்காக வைக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ. 400ல் இருந்து கிடைக்கக்கூடிய வட்டித் தொகையினைக் கொண்டு பத்து பிராமணருக்கு அவரும் அவருடைய தமக்கை காமாட்சி அம்மாளும் அன்னம் வழங்கி தருமம் நடத்தி வருவதை குறிப்பிடுவதோடு இவர்களுக்குப் பிறகு மேற்படி தருமத்தை தமக்கை மகள் கங்கா பாய் அம்மாள் நடத்தி வர வேண்டும் என்பதனையும் இதனை சகலரும் அறியும்படியாக கல்வெட்டு வெட்டுவித்ததையும் குறிப்பிடுகின்றனர்.
கொடை அளித்தவர்களின் பெயர்களைக் காணும்போது மராத்திய வழி வந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது.
கல்வெட்டு வரிகள்

  1. 1889ம் வருஷம் ஜனவரி
  2. மீ… சருவதாரி வருஷம் தை மீ…
  3. தஞ்சாவூர் கோட்டைக்குள் ரா
  4. ஜ கோபாலசுவாமி கோவில்
  5. வீதி அண்ணு பாட்டகர்
  6. சொல்படி நாகோபா பாட்ட
  7. கர் செயித தற்மம்
  8. 1887ம் வருடம் பிப்பரவரி மாதம் 1 தேதி
  9. யில் என் தமயன் வெங்கோபா
  10. பாட்டகர் எழுதி வைத்த உயில்படி
  11. 175 நீ வீட்டில் அண்ணு பாட்ட
  12. கருடைய மேல்புரம் வீடு துவா
  13. தசி கட்டளை தற்மத்துக்காக விட
  14. பட்டிருக்கிரது தவிர மேற்படி தர்மத்துக்
  15. காக அவருடய அயிவேஜியில்
  16. சிலவு போக பாக்கி ரூ. 400 யிருக்கிரது
  17. அந்த பண்டின் வட்டி மாதம் 1க்கு ரூ. 3 வ
  18. ருவதை கொண்டு பத்து பிறாமணாளு
  19. க்கு நானும் என் தமக்கை காமாக்ஷி அ
  20. ம்மாளும் அன்னம் போட்டு மேற்படி தர்ம
  21. ங்கள் நடத்தி வருகிறோம் மேல் சுண்ண
  22. 175 நீ வீட்டில் கீழ்புரம் யெனக்கு சொ
  23. ந்தமான கட்டுக்கோப்பு வீடு மனை
  24. க்கு பிரதமை துவாதசி கட்ட
  25. ளை தற்மத்துக்காக விடப்பட்டி
  26. ருந்தது யெங்களிருவருக்கு
  27. பிறகு மேற்படி தற்மத்தை யென் த
  28. மக்கை பெண்ணாகிய கங்கா
  29. பாயி அம்மாள் நடத்தி வரு
  30. வது யிது சகலரும் அறியவும் என குறிப்பிடப்பட்டுள்ளது
error: Content is protected !!